TNPSC தேர்வில் சீர்திருத்தம் - சில தகவல்கள் (9.3.2020)

தினத்தந்தி தலையங்கம் மார்ச் 9, 2020

அரசு பணியாளர் தேர்வில் சீர்திருத்தம்
  • தமிழ்நாட்டில் படித்து முடித்த இளைஞர்களிடையே வேலைவாய்ப்பு திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. எல்லோருக்கும் அரசு பணியில் பெரிய ஈர்ப்பு இருக்கிறது. மத்திய-மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகளுக்காக எப்படியும் நம்மை தயார்படுத்திக் கொள்ளவேண்டும், தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற விடாமுயற்சியோடு, தேர்வுகள் நடக்கும்போதெல்லாம் கடுமையாக படித்து தேர்வை எழுதும் இளைஞர்கள், வெற்றி பெறவில்லை என்றால், அப்படியே சோர்ந்து போய்விடுகிறார்கள். “நன்றாக படித்து தேர்வு எழுதிய நான் தேர்ச்சி பெறவில்லை. எந்தவித தகுதியும் இல்லாதவர்கள், எந்த தயாரிப்பும் இல்லாதவர்கள் வெற்றிபெற்று அரசு பணியில் சேர்ந்துவிடுகிறார்கள்” என்ற பேச்சு இளைஞர்கள் இடையே அரசல், புரசலாக இருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது குரூப்-4 தேர்வில் நடந்த ஒரு பெரிய முறைகேடு அம்பலத்துக்கு வந்தது. 
  • ஜாபர்சேட் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை திறமையாக புலன் விசாரணை செய்து குரூப்-4 தேர்வு மட்டுமல்ல, குரூப்-2ஏ என்று பல தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை பற்றி ஒன்றன்பின் ஒன்றாக விசாரணை செய்து வருகிறார்கள். கைது படலமும் நீண்டுகொண்டே போகிறது.
  • இந்த நிலையில், குரூப்-4 தேர்வில் அழியும் மை வைத்து தேர்வை எழுதச்சொல்லி அந்த மை அழிந்தவுடன், சரியான விடைகளை எழுதிய பெரிய முறைகேடு அம்பலத்துக்கு வந்து இருக்கிறது. தேர்வு மையத்தில் இருந்து விடைத்தாளை சென்னைக்கு கொண்டுபோகும் வழியில் இடையில் அந்த வேனில் உள்ள கட்டுகளில் இருந்து விடைத்தாளை திருத்தி, மீண்டும் வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல குரூப்-2ஏ தேர்வில் “விடைதெரிந்த கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்து, மற்ற கேள்விகளுக்கு நீ பதில் அளிக்க வேண்டாம். 
  • நாங்கள் பதில் அளித்துக்கொள்கிறோம்” என இடைத்தரகர்கள் செய்த முறைகேடும் வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது. ஆக, மொத்தத்தில் தேர்வு முறையில்தான் பெரிய கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அரசு பணித்தேர்வில் பல முறைகேடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலத்துக்கு வந்துகொண்டு இருக்கிறது. இப்போது நடந்த முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். எதிர்காலத்தில் இதை தவிர்க்க நிச்சயமாக பெரிய மாற்றங்கள் தேவை. 
  • இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வரவேண்டும் என்றால், தேர்வுகளில் எந்த முறைகேட்டுக்கும் இடம் அளிக்காமல், “தகுதி இருக்கிறதா? உனக்கு வேலை தானாக தேடிவரும்” என்ற நிலையை கொண்டுவர வேண்டியது மிகமிக இன்றியமையாதது ஆகும்.
  • சமீபத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு ஆதார் கட்டாயம் என்று அறிவித்தது. இப்போது குரூப்-4, குரூப்-2ஏ போன்ற தேர்வுகளுக்கு பொது அறிவுத்தாள் கொண்ட ஒரு தேர்வு முறை மட்டும்தான் நடக்கிறது. இனி முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வு என்று இரு நிலைகளாக நடத்தப்படும் என்று சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், அனைத்து கேள்விகளுக்கும் இனி விடை அளிக்கவேண்டும். ஏதாவது வினாவுக்கு பதில் தெரியவில்லை என்றால், அதற்காக கூடுதலாக கொடுக்கப்பட்டு இருக்கும் கட்டத்தில் கருமையாக்கவேண்டும். அதுமட்டுமல்லாமல், தேர்வு நேரம் முடிந்ததும் 15 நிமிடங்கள் கூடுதலாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் எந்தெந்த கட்டங்கள் எத்தனைமுறை நிரப்பப்பட்டுள்ளன என்பதை குறிப்பிடவேண்டும். 
  • இதுமட்டுமல்லாமல், விடைத்தாளில் தேர்வர்களின் கையெழுத்துக்கு பதிலாக, இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. விடைத்தாளை பாதுகாப்பான முறையில் கொண்டுவருவதற்கு அந்த வாகனத்தில் ஜி.பி.எஸ். மற்றும் கண்காணிப்பு கேமரா வசதி பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • நிச்சயமாக இந்த மாற்றங்கள் வரவேற்கத்தகுந்தவை. அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எல்லா தேர்வுகளிலும் இந்த புதிய முறையை செயல்படுத்துவதோடு, எந்த வழியிலும் இனி தவறே நடக்காத ஒரு முறையை அரசு பணியாளர் தேர்வாணையம் உறுதிப்படுத்த வேண்டும்.
  • Dinathanthi article shared here for Education and Exam Purpose
TNPSC தேர்வில் சீர்திருத்தம் 2020 
Previous Post Next Post