Gk Today - Father of India's Nuclear Power Homi J. Bhabha

ஜனவரி 24 -  ஹோமி பாபா நினைவு நாள்
இந்திய அணுக்கரு அறிவியலின் தந்தை - ஹோமி ஜெஹாங்கீர் பாபா

கட்டுரை: நா.சு.சிதம்பரம், தினத்தந்தி, 23.2.2020 
 • இந்திய நாட்டில் அணு ஆற்றல் துறையை உருவாக்கி, உலக நாடுகள் வியக்கும் வண்ணம் அத்துறை வளர்ச்சியடைவதற்கு அடித்தளமிட்ட ஆற்றல் மிக்கவர். ‘இந்திய அணுக்கரு ஆற்றல்’ திட்டத்தின் தந்தையாக கருதப்படுபவர் ஹோமி ஜெஹாங்கீர் பாபா.
 • 1909-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந் தேதி ஹோமி பாபா மும்பையில் பிறந்தார். இவருடைய தந்தை ஜெஹாங்கீர் ஹோர் முஸ்ஜி பாபா மிகப் பெரும் புகழ்பெற்ற வக்கீலாக பணியாற்றி வந்தார். தாயார் பெயர் மெஹெரன். பள்ளிப்படிப்பை முடித்ததும், மும்பையிலுள்ள எல்பின்ஸ்டன் கல்லூரியில் 15 வயதில் சேர்ந்து படிப்பை தொடர்ந்தார். பாபாவின் தந்தை இவரை இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு எந்திர பொறியியல் படிப்பை மேற்கொள்ள அனுப்பி வைத்தார். பொறியியல் படிப்பை முடித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பொறியியலில் இவர் இயற்பியலை தனியே படிக்க வேண்டும் என்று விரும்பியதால் அதன்படி கோட்பாட்டியலில் இயற்பியல் படிப்பையும் படித்து, அதன் பின் தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார்.
 • 1933-ம் ஆண்டு ‘காஸ்மிக் கதிரியக்கத்தின் உள்ளர்ப்பு’ என்ற தன் முதல் ஆய்வறிக்கையை வெளியிட்டு ‘அணுக்கரு இயற்பியலில்’ முனைவர் பட்டம் வென்றார். இந்த ஆய்வறிக்கையின் பயனால் இவர் ‘சர் ஐசக் நியூட்டன்’ பெயரில் மானியம் பெறும் மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் இவருடைய கோட்பாட்டில் படிப்பு மேலும் மூன்று ஆண்டுகள் தொடர்ந்தது. முதல் பகுதியில் கேம்பிரிட்ஜில் கோட்பாட்டு இயற்பியலை ‘ரால்ப் எச் பெளலர்’ என்ற அறிவியலறிஞரின் வழிகாட்டுதலிலும், மறு பகுதியை கோப்பன்ஹேகனில் ‘நீல்ஸ் போர்’ என்ற அறிவியலறிஞரின் வழிகாட்டுதலிலும் ஆய்வுகளை மேற்கொண்டு செயல்பட்டார்.
 • 1935-ல் மின்னணுபாசிட்ரான் சிதறலில் ஏற்படும் குறுக்கமைப்பைக் கணக்கிடும் முறையை முதன் முதலாக கண்டுபிடித்ததுடன் அதை ஓர் ஆய்வறிக்கையாகவும் புகழ்பெற்ற ராயல் அறிவியல் நிறுவனத்திற்கு அளித்தார். இந்த சிதறல் பின்னாளில் ‘பாபா சிதறல்’ என்று இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
 • 1936-ல் வால்டர் ஹெயிட்லர் என்ற அறிவியலறிஞருடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு வேக மின்னணுக்கள் செல்லும் வழி மற்றும் காஸ்மிக் கதிர்ப்பொழிவுகள் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
 • 1939-ம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பினார். பெங்களூருவில் அமைந்திருந்த இந்திய அறிவியல் நிறுவனத்தில், இயற்பியல் துறையில் உயர் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அந்நிறுவனத்தின் தலைவராக விளங்கியவர் இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற தமிழர் சர் சி.வி.ராமன். அவருடைய நன்மதிப்பையும் இவர் பணியாற்றிய முறையில் பெற்றார்.
 • பாபாவினுடைய உறவினர் சர் டொராப் டாடா அறக்கட்டளை அளித்த சிறப்பு ஆய்வுத் தொகையைப் பயன்படுத்தி அந்நிறுவனத்தில் காஸ்மிக் கதிர்களுக்கான ஆய்வுப் பிரிவு ஒன்றைத் தொடங்கினார். 1941-ம் ஆண்டு மார்ச் 20-ல் ராயல் அறிவியல் நிறுவனத்தின் ஊதிய உதவி பெற்ற புத்தாய்வு மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1944-ல் இவர் பெங்களூருவில் இருந்து எழுதிய கடிதத்தின் அடிப்படையில், டாடா குழுமம் மும்பையில் ஓர் அடிப்படை ஆய்வு மையத்தைத் தொடங்க பாபாவிற்கு உதவியது. அதன்படி டாடா அடிப்படை ஆய்வு நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் பெருமளவில் இயற்பியல், வேதியியல், மின்னணுவியல் மற்றும் கணிதவியல் துறை சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
 • 1944-ல் தனிப்பட்ட முறையில் அணுக்கரு ஆயுதங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். 1948-ல் அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவை சந்தித்து இந்திய அரசின் உதவியுடன் அணு ஆற்றல் ஆணையம் ஒன்றை முதன் முதலாகத் தொடங்கினார். இதன் முதல் தலைவராக நேருவால் பாபா நியமிக்கப்பட்டார். அணு ஆயுதங்களைத் தயாரிக்க அனுமதியும் வழங்கி அதன் இயக்குனராகவும் இவரை பிரதமர் நியமித்தார். அணு ஆற்றலுக்கான முனைப்புடன் கூடிய ஆய்வு மற்றும் தாதுக்களைக் கண்டறிதல் போன்றவற்றை நெறிமுறைப்படுத்தினார். 1950-ல் நடைபெற்ற அனைத்துலக அணு ஆற்றல் செயலாண்மை மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.
 • அவ்வாறு கலந்துகொண்ட பிறகு, இந்தியாவில் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு மூன்று அடுக்கு அணு ஆற்றல் திட்டத்தை வகுத்தார். அதில் இயற்கை யுரேனியத்தைப் பயன்படுத்துதல், புளூட்டோனியம் மற்றும் நம்மிடம் ஏராளமாக உள்ள தோரியம் அணுக்களை வெப்ப அணு உலைகள், வேக ஈனுலைகள் மற்றும் முன்னேறிய அணு உலைகள் ஆகியவற்றில் ஒரு மறு சுழற்சியாக்க முறையில் பயன்படுத்துதல் ஆகியவனவாகும்.
 • இவ்வளர்ச்சிகளுக்கெல்லாம், ஹோமி பாபாவின் மீது நம்பிக்கையையும், சிறந்த நட்பையும் வைத்திருந்த ஜவஹர்லால் நேருவும் ஒரு காரணம். இச்செயல்கள், நவீன இந்திய கட்டமைப்பு உருவாக்கத்திற்கு நேருவுக்கு உதவியது.
 • அணு ஆற்றல் நிகழ்வுகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய அணு ஆய்வு நிலையத்தை உருவாக்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தினார். மும்பையில் டிராம்பே என்னுமிடத்தில் 1200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அணு ஆற்றல் ஆய்வு நிலையம் ஒன்று 1954-ல் தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் அணு ஆற்றலுக்கான துறை ஒன்றும் தொடங்கப்பட்டது.
 • பல்வேறு அறிவியல் ஆய்வு, கட்டுமானம், பண்பாடு ஆகிய பிரிவுகளில் மனித வள மேம்பாட்டிற்கு ஹோமி பாபா அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இவர் உருவாக்கிய அணு ஆராய்ச்சி மையத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பயிற்சிப் பள்ளி பல்லாயிரக்கணக்கான அறிவியல் ஆய்வாளர்களையும், பொறியாளர்களையும் நாட்டிற்கும், உலகிற்கும் வழங்கியுள்ளது. இவருக்கு பிறகு இந்த நிலையத்திற்கு பாபா அணு ஆராய்ச்சி மையம் என்று பெயரிடப்பட்டது.
 • ஹோமி பாபா பல்வேறு விருதுகளையும், பாராட்டுகளையும் தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் பெற்றுள்ளார். 1942-ல் ஆதம் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. அணுக்கரு அறிவியலில் இவரின் பங்களிப்பிற்காக, 1954-ல் ‘பத்ம பூஷண்’ விருது வழங்கப்பட்டது. 1955-ல் ஐக்கிய நாடுகள் சபையால் ஜெனீவாவில் கூட்டப்பட்ட ‘அமைதிப் பணிக்கு அணு ஆற்றல்’ என்ற முதல் அனைத்துலக மாநாட்டிற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
Previous Post Next Post