TNPSC General Tamil - ஆறுமுக நாவலர்

தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி ஆறுமுக நாவலர்


மறைமலை இலக்குவனார் (Dailythanti, 19.12.2019
 • பழங்காலத்தில் இலக்கியங்கள் அனைத்தும் ஏட்டுச்சுவடிகளிலேயே இருந்தன. அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு ஏட்டில் இருந்த இலக்கியங்கள் அச்சுவடிவம் பெற்றது தமிழ் இலக்கிய வரலாற்றின் திருப்புமையம் ஆகும். ஏட்டிலிருந்து அச்சுப் பதிப்பது அப்படி ஒன்றும் எளிய செயல் இல்லை. ஏட்டில் உள்ளவற்றைப் புரிந்துகொண்டு எந்தப் பிழையும் இல்லாமல் அச்சில் பதிக்கும் அரிய பணியை மேற்கொண்ட பெரியவர்களாலேயே இன்றைக்குத் தமிழ் இலக்கணங்களும் இலக்கியங்களும் நமக்குக் கிடைத்துள்ளன. அத்தகைய அரிய பணியை ஆற்றிய முன்னோடிகளுள் முதன்மையானவர் ஆறுமுகநாவலர்.
 • ஏட்டுச்சுவடிகளிலிருந்து பழந்தமிழ் நூல்களை மீட்டுக் கொடுத்த பெருமைக்குரியவர்கள் என்று ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர், ச.வையாபுரிப்பிள்ளை எனப் பெரிய பட்டியலையே அடுக்கலாம். “தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த பெரும்பணிக்கு அடித்தளம் அமைத்தவர் ஆறுமுக நாவலர்; சுற்றுச்சுவர் எழுப்பியவர் சி.வை.தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்தவர் உ.வே.சாமிநாதையர்.” என்று திரு.வி.க. கூறியுள்ளது தமிழ்ப்பதிப்பு வரலாற்றையே சுருக்கமாகக் காட்டுகிறது.
 • யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் தம்பதியருக்குப் புதல்வனாக 1822-ம் ஆண்டு டிசம்பர் 18-ந் தேதி பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் ஆறுமுகம் என்பதாகும். அவருடைய தகப்பனார் கந்தப்பிள்ளை மட்டுமின்றி பாட்டன் பரமநாதர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவருமே தமிழ் அறிஞர்கள். எனவே மூன்று தலைமுறையினர் தமிழ் அறிஞர்களாக விளங்கிய புகழ்மிக்க வழிமரபில் தோன்றிய ஆறுமுகம் கல்வி கேள்விகளில் தலைசிறந்து விளங்கியதில் வியப்பில்லை. எந்த இலக்கியத்தைப் பற்றியும் மடைதிறந்த வெள்ளம்போல் கருத்துகளைப் பொழிந்து தள்ளும் இவருடைய சொல்லாற்றலைப் பாராட்டித் திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு “நாவலர்” என்னும் பட்டத்தை வழங்கியது. அதன்பின் இவர் ஆறுமுக நாவலர் என்றே அழைக்கப்பட்டார்.
 • சிறப்புமிக்க புலவர்களிடம் படித்து இளமையிலேயே தமிழிலும் வடமொழியிலும் நன்கு புலமைபெற்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றதுடன் தாம் பயின்ற அக்கல்லூரியில் சில காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
 • தமிழையும் ஆங்கிலத்தையும் கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவருடைய தமிழறிவையும் ஆங்கிலப் புலமையையும் கண்டு மகிழ்ந்த கல்லூரி அதிபர் பெர்சிவல் பாதிரியார் பைபிளைத் தமிழில் மொழிபெயர்க்கும் தமது பணிக்குத் துணையாகத் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தார். தமிழும் சைவமும் தமது இரு கண்களாகப் போற்றிய ஆறுமுக நாவலர் தமிழில் பைபிள் மொழிபெயர்ப்புப் பணியாற்றியது அவருடைய பொதுநோக்கிற்கும் பெருந்தன்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
 • ஏட்டுச்சுவடிகளைக் கண்டறிந்து நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் முனைந்து பாடுபட்டார். இதற்காகச் சொந்தமாக அச்சு இயந்திரம் வாங்கி வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் அச்சுக்கூடம் நடத்தினார். சொந்த அச்சுக்கூடம் வைத்திருந்ததும் மரபுவழியாகப் பெற்ற தமிழ்ப்புலமையும் ஆங்கிலக் கல்வியும் இவரது பதிப்புப் பணி சிறந்து விளங்கத் துணைபுரிந்தன. தாம் புரிந்த பதவியையும் உதறித் தள்ளினார். திருமணமும் செய்து கொள்ளவில்லை. பதிப்புப் பணியும் சைவசமயத்தைப் பரப்பும் பணியுமே தமது குறிக்கோள்களாகக் கொண்டார்.
 • இலக்கணம், சமயநூல்கள், காப்பியங்கள் எனப் பலவகையாக 44 நூல்களைப் பதிப்பித்தார். இலக்கணம் தொடர்பாகவும் சைவசமயத்திற்கு விளக்கமாகவும் 24 நூல்கள் எழுதியுள்ளார். 16 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவர் உரை எழுதிய நூல்களுள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி முதலான சிறுவர் இலக்கியமும் அடங்கும். பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், திருமுருகாற்றுப்படை முதலான இலக்கியங்களுக்கு இவருடைய உரை எளிமையாக மக்கள் புரிந்துகொள்ள வழிவகுத்தது.
 • ஆங்கில நூல்கள் பதிக்கப்படுவதைப் போன்றே உள்ளடக்கம், பொருள் அடைவு, பாடவேறுபாடு, அடிக்குறிப்பு ஆகிய பகுதிகளோடு சிறப்பாகப் பதிப்புச் செய்தார். பதிப்புப்பணியில் இன்று ஈடுபடுவோருக்குக் கூட வழிகாட்டும் வகையில் இவரது பதிப்புகள் அமைந்துள்ளன.
 • தமிழ் உரைநடை இவருக்கு முன் மிகக் கடினமாக எளிதில் புரிந்துகொள்ள இயலாத வகையில் அமைந்திருந்தது. ஆங்கிலத்தைப் போன்றே அரைப்புள்ளி (கமா), முக்கால் புள்ளி, முற்றுப்புள்ளி ஆகிய நிறுத்தற்குறிகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆறுமுகநாவலரே என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக எழுத்தறிவு பெற்றுப் புத்தகவாசிப்பில் ஈடுபடுவோரை முன்னிலைப் படுத்தியே இலக்கணத்தையும் சைவசமயத்தையும் பற்றிய பல விளக்கநூல்களை எழுதிய சிறப்பு இவருக்கே உரியது. எனவே இவரை ‘தமிழ் உரைநடையின் தந்தை’ என்று அறிஞர்கள் பாராட்டினர்.
 • ஆறுமுக நாவலரை ‘புதிய தமிழ் உரைநடையின் தந்தை’ என்று தமிழறிஞர் மு.வரதராசனார் போற்றியுள்ளார்.
 • சிதம்பரத்தில் 1864-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி சைவ வித்தியாசாலையை நிறுவினார். சிதம்பரத்தில் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்து தமிழையும், சைவத்தையும் கற்பித்தார்.
 • இலங்கையில் ஆங்கிலேய அரசு மதுவிற்பனை மூலம் வருவாயைப் பெருக்கிக்கொள்கிறதே என வருந்தினார். ஆறுமுக நாவலர் 1874-ம் ஆண்டு வெளியிட்ட ‘இலங்கைப் பூமி சரித்திரம்’ என்ற நூலில், “வறுமைக்கும் துன்பத்துக்கும் சகல பாவங்களுக்கும் பிறப்பிடம் மதுபானம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 • திருக்கேதீஸ்வரம், கீரிமலைச் சிவன் கோவில் ஆகிய கோவில்களின் தொன்மைச் சிறப்புகளை மக்களுக்கு எடுத்துக் கூறிப் பராமரிப்பு இன்றி இருந்த ஆலயங்கள் மீண்டும் அமைய வழிவகுத்தார்.
 • இவரது முதல் சொற்பொழிவு வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் 1847-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சொற்பொழிவு ஆற்றினார். இவரது பொழிவைக் கேட்டு நிறையப் பேர் மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட்டனர். புதிதாகக் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிச்சென்றிருந்தவர்கள் மீண்டும் சைவ சமயத்திற்கே திரும்பினர். அங்ஙனம் மாறிவந்தவர்களுள் கிங்ஸ்பரி என்னும் பெயரைக் கொன்டவரே பின்னாளில் சி.வை.தாமோதரம்பிள்ளை என்னும் புகழ்வாய்ந்த தமிழறிஞர் ஆனார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரி என்னும் பெருமைக்குரிய இவர் மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசியராகப் பணிபுரிந்து பின்னர், நாவலரைப் போல் பதிப்புப்பணியிலும் ஈடுபட்டார்.
 • சொற்பொழிவுத்துறையில் முன்னோடிகள் என்று போற்றப்படும் வ.உ.சி., திரு.வி.க., அண்ணா ஆகியோருக்கு நெடுநாட்கள் முன்னதாகவே இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் ஈடு இணையற்ற சொற்பொழிவாளராகத் திகழ்ந்த பெருமை நாவலருக்கே உரியது.
 • ஆறுமுக நாவலரின் நினைவாக இலங்கை அரசு 1971-ம் ஆண்டு அக்டோபர் 29-ல் நினைவு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது.
 • ஆறுமுக நாவலரை “செந்தமிழைப் பேணி வளர்த்த பெரும்புலவன்” என கவிமணி பாராட்டியுள்ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post