How to Prepare Railway Exams RRB 2019
Dinathanthi dated 25.4.2019, Article Shared here for Education and Knowledge Purpose.
ரெயில்வே தேர்வு : சில அடிப்படைகள்
- ரெயில்வேயில் பணியாற்றுவது என்பது பல இளைஞர்களின் லட்சியமாக உள்ளது.
- உலகிலேயே அதிக பணியாளர்களைக் கொண்ட நிறுவனமாக இந்திய ரெயில்வேதுறை விளங்குகிறது. பல லட்சம் ஊழியர்கள் இந்திய ரயில்வேயில் பணியாற்றுகிறார்கள்.
1.3 லட்சம் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு - 2019
- தற்போது மேலும் 1.3 லட்சம் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கடந்த ஆண்டில் சுமார் 90 ஆயிரம் பணியிடங்களை அறிவித்ததும் நினைவூட்டத்தக்கது. ரெயில்வே போட்டித் தேர்வில் வெற்றி வாய்ப்பு பெறுவது பற்றி இங்கே பார்க்கலாம்.
ரெயில்வே தேர்வுகள் எளிமையானவை
- சிவில் சர்வீஸ் தேர்வு, வங்கித் தேர்வு, தமிழக அரசுப் பணித் தேர்வுகளை ஒப்பிடும்போது ரெயில்வே தேர்வுகள் சற்று எளிமையானவைதான். அதனால் போட்டியிடுவோர் எண்ணிக்கை மிகுதியாக இருக்கும்.
- அது பணியைப் பெறுவதில் சவாலை ஏற்படுத்தும். இருந்தாலும் விடா முயற்சியால், தொடர் பயிற்சியால் வெற்றி பெற்றுவிடலாம்.
- சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே ரெயில்வே தேர்வுகள் நடந்தன.
22 தேசிய மொழிகளில் ரயில்வே தேர்வை எழுதலாம்
- 2014 முதல் இந்திய அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 தேசிய மொழிகளிலும் இந்த தேர்வை எழுத முடியும்.
- அதன்படி தமிழிலும் தேர்வை எழுதலாம். இதற்காக அந்தப்பகுதி பிராந்திய மொழியில் வினாத்தாள் அச்சிடப்படும். தெற்கு மண்டல வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம் உள்பட 6 மொழிகளில் அச்சாகிறது. தங்கள் தாய் மொழியில் தேர்வை எழுதுவது ஏராளமானவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது.
- தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பணியிடங்கள் குரூப்-டி வகையின் கீழ் வருபவை. குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் முதல் அனைவரும் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம்.
வினாத்தாள் கொள்குறி வகை (Objective Type)
- வினாத்தாள் கொள்குறி வகையில் (Objective Type) விடையை தேர்வு செய்து குறிப்பிடும் வகையில்தான் அமையும். பொது அறிவுப் பகுதியில் கணிதம், புவியியல், நடப்பு நிகழ்வுகள், அறிவியல், அரசியல், வரலாறு ஆகியவை அடங்கும்.
- விடைத்தாளைக் கொடுத்ததும், ஓ.எம்.ஆர். சீட்டை நிரப்புவதற்குமுன் அனைத்து வழிகாட்டுதல்களையும் கூர்ந்து படிக்க வேண்டும். விவரங்கள் புரியாமல் இருந்தால் தேர்வாளரிடம் கேட்டுக் கொள்ளலாம்.
- வினாத்தாளைத் திறக்கச் சொன்ன பிறகே வினாத்தாளை திறக்க வேண்டும். ஒவ்வொரு வினாவிலும் ஒரே ஒரு சரியான விடைதான் இருக்கும். தவறான விடையைத் தேர்வு செய்தால் மதிப்பெண் குறைக்கப்படும். எனவே நன்கு விடை தெரிந்தால் மட்டுமே பதிலளிக்க வேண்டும். யூக அடிப்படையிலான பதில், சரியான பதிலின் மதிப்பெண்ணையும் இழக்கச் செய்துவிடும் என்பதால் கவனம் தேவை.
சில பணிகளுக்கு உடல் தகுதி தேர்வு முறை
- சில பணிகளுக்கு உடல் தகுதி தேர்வு முறை பின்பற்றப்படும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்களே அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
- ஆண்களுக்கு 1000 மீட்டர் ஓட்டம், 4 நிமிடம் 15 வினாடிகளுக்குள் ஓடி முடிக்க வேண்டும்; பெண்களுக்கு 400 மீட்டர் ஓட்டம். 3 நிமிடம் 10 வினாடிகளுக்குள் ஓடி முடிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவா்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.
- ரெயில்வேயில் பணி பெற்றுவிட்டால், நல்லதொரு வாழ்க்கைப் பாதை அமைவதுடன் பல்வேறு சலுகைகளையும் பெற முடியும். ரயிலில் பயணம் செய்வது உள்பட பல்வேறு சலுகைகள் ரெயில்வே பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
- ரெயில்வே தேர்வு, பணியின் தரத்திற்கேற்ப இருந்தாலும், அதிகமான போட்டியாளர்களை வடிகட்டும் வகையில் நடத்தப்படுவதால், சவாலாகவே இருக்கும்.
- கடுமையான முயற்சி இல்லாமல் வெற்றி பெற முடியாது. சில அன்றாட நடைமுறைகளை கடைப்பிடித்தால்தான், வெற்றி கைகூடும்.
கணினி அடிப்படையில் தேர்வு
- ‘குரூப் ஏ, பி’ பணிகள் சற்று சவாலானவை. கணினி அடிப்படையில் தேர்வு நடத்தப்படும். முதல் கட்ட தேர்வுக்குப் பின்னா், கணினி அடிப்படையிலான இரண்டாம் கட்ட தேர்வும் நடத்தப்படும்.
- இரண்டிலும் தேர்ச்சி பெறுவர்களுக்கு நேர்காணல் நடைபெறும். சில தொழில்நுட்ப பணிகளுக்கு அது தொடர்பான தேர்வுகள் நடத்தப்படும்.
- சில பணிகளுக்கு உடல்தகுதி சோதிக்கப்படும். மருத்துவ பரிசோதனையும், சான்றிதழ் சரிபார்த்தலும் நடைபெறும்.
- தேர்வில் வெற்றி பெற நாள்தோறும் பத்திரிகைகளை படிக்க வேண்டும். நடப்பு நிகழ்வுகளை அறிய இது உதவும். மேலும் தேர்வு தொடர்பான பாடப்பகுதிகளை படிக்க நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். தேவையானவற்றை குறிப்பு எடுக்க வேண்டும். இது அடிப்படையாகும். படித்த பாடத்தையே மீண்டும், மீண்டும் படிப்பது நினைவில் ஏற்ற அவசியமாகும். தேர்ச்சியையும் எளிமையாக்கும்.
- தேர்வில் குறித்த நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். இதற்காக முந்தைய தேர்வுத்தாள்கள் மற்றும் பயிற்சி வினாத்தாள்களைக் கொண்டு மாதிரி தேர்வை எழுதி பயிற்சி பெறுவது நல்ல பலன் தரும்.
- முதல்முறையாக தேர்வை எதிர்கொள்ள தயாராகுபவர்கள், பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறலாம். அது உங்கள் அறிவையும், அனுபவத்தையும் பலப்படுத்துவதாக அமையும். வெற்றியை சுலபமாக்கும்.