- TNPSC தேர்வர் கள் நலனை கருத்தில் கொண்டு வாய்ப்புள்ள இனங்களில் தவறுகளை களைய தேர்வு முறைகளில் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வந்துள்ளது. இருப்பினும் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட சில தேர்வுகளில் விரும்பத்தகாத சில முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.
- TNPSC தேர்வாணையம் தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளிலும் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற உறுதி பூண்டு இருக்கிறது. மேலும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வண்ணமாக பல்வேறு முடிவுகளை தேர்வாணையம் எடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பல ஆக்கப்பூர்வமான சீர் திருத்த நடவடிக்கைகளை எடுக்கவும் ஆவன செய்து வருகிறது. வெளிப்படைத்தன்மை அதிகரிக்க பின்பற்றப்பட உள்ள முடிவுகள் வருமாறு:
- விடைத்தாள் நகல்: தேர்வு நடைமுறைகள் முழுவதும் நிறைவடைந்த உடன் இறுதியாக தேர்வு பெற்றவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இதன் தொடக்கமாக 2019-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வின் நடைமுறைகள் முற்றிலுமாக நிறைவடைந்த நிலையில் தேர்ச்சி பெற்ற 181 பேரின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
- 2020 ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறை: தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவு பெற்றபின், தேர்வர்களின் விடைத்தாள் நகல்களை (OMR மற்றும் எழுத்துத் தேர்வு விடைத்தாள்கள்) இணையதளம் மூலமாக உரிய கட்டணம் செலுத்தி உடனடியாக பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும். இந்த முறை 2020 ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
- பல்வேறு பதவிகள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இவ்வாறு கலந்தாய்வு நடைபெறும் நாட்களில் அந்தந்த நாளின் இறுதியில் துறை, மாவட்டம், இடஒதுக்கீடு வாரியாக நிரப்பப்பட்ட இடங்கள் மற்றும் காலியிடங்களின் விவரம் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இதுவும் 2020 ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
- ஆதார் எண் கட்டாயம்: தேர்வாணையம் தேர்வர்களின் நலன்கருதியே அவர்தம் விருப்பப்படி தேர்வு மையத்தின் இணையவழி விண்ணப்பத்தின்போது தேர்வு செய்யும் நடைமுறையினை பின்பற்றி வருகிறது. இனி தேர்வர்கள் இணைய வழியே விண்ணப்பிக்கும்போது 3 மாவட்டங்களை தங்களுடைய தேர்வு மைய விருப்பமாக தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு எழுதும் மையங்களை தேர்வர்களுக்கு அதிக சிரமம் ஏற்படாத வகையில் தேர்வாணையமே ஒதுக்கீடு செய்யும்.
- தேர்வு நடவடிக்கைகளை மேலும் செம்மைப்படுத்தவும், ஒரேநபர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதை தடுக்கவும் விண்ணப்பிக்கும் போது தேர்வர்கள் ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்படும்.
- தேர்வு எழுதவரும் தேர்வர்களின் விரல் ரேகையை ஆதார் தகவலோடு ஒப்பிட்டு மெய்த்தன்மையை சரிபார்த்த பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப் படுவார்கள்.
- இனிவரும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாகவே முறைகேடுகள் ஏதேனும் இருப்பின் அதனை முன்கூட்டியே அறிந்து முழுவதும் தடுக்கும் வண்ணமாக உயர் தொழில்நுட்ப தீர்வு வரவிருக்கும் தேர்வுகளில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும். இதுதவிர தேர்வு நடைமுறை சார்ந்த பிற செயல்பாடுகளிலும் விரைவில் தக்க மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
- Courtesy: Dinathanthi 8.2.2020