தமிழ்நாட்டில் உள்ள 15 நீர்நிலை சரணாலயங்கள் (Water Sanctuaries in Tamil Nadu)

Courtesy: தினத்தந்தி நாளிதழில் 24.11.2019 அன்று வெளியான கட்டுரை, அறிவுத்தேடல் மற்றும் கல்வி ,போட்டித்தேர்வு தொடர்பாக இங்கு பகிரப்படுகிறது.Water Sanctuaries in Tamil Nadu
Water Sanctuaries in Tamil Nadu
தமிழ்நாட்டில் உள்ள 15 நீர்நிலை சரணாலயங்கள்

 • தமிழ்நாட்டில் உள்ள 15 நீர்நிலைகளை சரணாலயங்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு பாதுகாத்து வருகிறது. அதன் விவரம்:
பழவேற்காடு ஏரி
 • திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சரணாலயம் சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில், தமிழ்நாடு - ஆந்திரா எல்லைப்பகுதி கடற்கரையில் 481 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
 • இதில், 153 கி.மீ. தமிழ்நாட்டில் உள்ளது. இந்தியாவில் உள்ள டாப்-10 சரணாலயங்களில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. நன்னீரும், கடல் நீரும் கலந்து காணப்படுகிறது. பூ நாரை, உள்ளான், பட்டைத் தலை வாத்து, பவளக்காலி, நெட்டைக் காலி, வாத்து, கொக்கு, மீன்கொத்தி என 100 வகையான பறவை இனங்கள் வந்து செல்கின்றன. ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பார்வையிட உகந்த காலம் ஆகும்.
வேடந்தாங்கல்
 • சென்னையில் இருந்து 82 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வேடர்கள் வந்து தங்கியதால் இந்த பெயர் பெற்றது. 1798-ம் ஆண்டு உருவான பழமையான சரணாலயமாகும். 74 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 30 ஆயிரம் பறவைகள் வருகின்றன.
 • கனடா, சைபீரியா, ஆஸ்திரேலியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து பலவிதமான பறவைகள் வருகை தருகின்றன. நீர்க்காகம், நீர்க்கோழி, கொக்கு, நாரை, கூழைக்கடா போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த சரணாலயத்தை பார்வையிட நவம்பர் முதல் மார்ச் வரை உள்ள காலம் ஏற்றதாகும். ஜனவரி மாதம் இங்கு அதிக அளவிலான பறவைகளை காண முடியும்.
கரிக்கிலி
 • வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 61 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்திற்கு செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை பறவைகள் வருகின்றன.
 • ஊசிவால் வாத்து, தட்டைவாயன், முக்குளிப்பான், புள்ளிமூக்கு வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பறவைகள் பெயர் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
காரைவெட்டி
 • அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சரணாலயம், அரியலூரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், திருச்சியில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 454 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்திற்கு 188 வகையான பறவை இனங்கள் வருகின்றன. அதில் 90 வகை நீர்ப்பறவைகள் ஆகும். அக்டோபர் முதல் மே மாதம் வரை இங்கு பறவைகள் நிறைந்திருக்கும். டிசம்பர், ஜனவரி மாதங்கள் பறவைகளை காண ஏற்ற மாதங்களாகும்.
உதயமார்த்தாண்டபுரம்
 • திருவாரூர் மாவட்டத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம், திருவாரூரில் இருந்து 65 கி.மீ. தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 68 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
 • 1999-ம் ஆண்டு உருவான இந்த சரணாலயத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரே பிரதானமாகும். சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தைகுத்தி நாரை உள்ளிட்ட பறவைகள் வருகை தருகின்றன. நவம்பர், டிசம்பர் மாதங்கள் பறவைகளை காண ஏற்ற மாதங்களாகும்.
வடுவூர்
 • திருவாரூர் மாவட்டத்தில், தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், திருச்சியில் இருந்து 75 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 1999-ம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இங்கு 40 விதமான நீர்ப்பறவைகள் வருகை தருகின்றன. மேட்டூர் அணை நீர் தான் இந்த சரணாலயத்திற்கும் ஆதாரமாகும்.
 • ஆகஸ்டு முதல் ஜனவரி வரை பறவைகள் வருகின்றன. வெள்ளை அரிவாள் மூக்கன், கூழைக்கடா, நாரை, ஊசிவால் வாத்து உள்ளிட்ட பறவைகள் முக்கியமானதாகும். நவம்பர், டிசம்பர் மாதங்கள் பார்வையிட உகந்ததாகும்.
சித்திரங்குடி
 • இந்த சரணாலயம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் 48 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1989-ம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு கூழைக்கடா, நத்தைகுத்தி நாரை உள்ளிட்ட பறவைகள் வருகை தருகின்றன. ஜனவரி மாதம் பறவைகளை காண ஏற்ற மாதமாகும்.
கூந்தன்குளம்
 • திருநெல்வேலி மாவட்டத்தில் 129 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம், திருநெல்வேலியில் இருந்து 33 கி.மீ. தொலைவில் கூந்தன்குளம், காடன்குளம் பகுதியில் பரந்து விரிந்து இருக்கிறது.
 • பூ நாரை, பட்டைத் தலை வாத்து, தட்டைவாயன், செண்டு வாத்து, மஞ்சள் மூக்கு வாத்து, செங்கால் நாரை, முக்குளிப்பான், கரண்டிவாயன் உள்பட 43 வகையாக பறவைகள் இங்கு வருகின்றன. ஜனவரி, பிப்ரவரி மாதம் பறவைகளை காண உகந்த மாதமாகும்.
வெள்ளோடு
 • ஈரோடு மாவட்டத்தில் வாடாமுகம் வெள்ளோடு என்ற இடத்தில் 77 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. மஞ்சள் மூக்கு நாரை, கரண்டிவாயன், கூழைக்கடா, நத்தைகுத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் என பல்வேறு பறவை இனங்கள் இங்கு வருகின்றன. இந்த சரணாலயத்தை காண ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் ஏற்றதாகும்.
மேல் - கீழ் செல்வனூர்
 • ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் மேல் செல்வனூர் - கீழ் செல்வனூர் கிராமங்களில் 593 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
 • 1998-ம் ஆண்டு உருவான இந்த சரணாலயத்திற்கு கூழைக்கடா, நத்தைகுத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன் உள்ளிட்ட பறவைகள் வருகை தருகின்றன. இங்கு வரும் பறவைகளை காண நவம்பர், டிசம்பர் மாதங்கள் உகந்ததாகும்.
கஞ்சிரங்குளம்
 • ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் 66 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. முதுகுளத்தூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள இந்த சரணாலயம் 1989-ம் ஆண்டு உருவானது. இங்கு 170 வகையான பறவைகள் வருகின்றன. அதில் மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் ஆகியவை முக்கியமானவை. நவம்பர், டிசம்பர் மாதங்கள் இந்த சரணாலயத்தை காண ஏற்ற மாதங்களாகும்.
வேட்டங்குடி
 • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் வேட்டங்குடி பட்டி மற்றும் பெரிய கொல்லுக்குடி பட்டி கிராமங்களில் 38 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
 • 1977-ம் ஆண்டு உருவான இந்த சரணாலயத்திற்கு கரண்டிவாயன், பாம்புத்தாரா, சாம்பல்நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கொண்டைக் குருவி, மீன்கொத்தி உள்ளிட்ட பறவைகள் வருகின்றன. நவம்பர், டிசம்பர் மாதங்கள் பறவைகளை காண உகந்ததாகும்.
கோடியக்கரை
 • நாகப்பட்டினம் மாவட்டத்தில் 17 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம் வேளாங்கண்ணியில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
 • இங்குள்ள சதுப்புநில பகுதியில் பட்டைத்தலை வாத்து, பூ நாரை, ஊசிவால் வாத்து, தட்டைவாயன், மஞ்சள் மூக்கு நாரை, நத்தைகுத்தி நாரை, கூழைக்கடா உள்ளிட்ட பறவைகளுடன் நரி, புள்ளிமான்களையும் காணலாம். இந்த சரணாலயத்தை காண நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை ஏற்ற காலமாகும்.
சக்கரக்கோட்டை
 • ராமநாதபுரம் மாவட்டத்தில் 230.49 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம் 2012-ம் ஆண்டு உதயமானது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இங்கு வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கும். 30 வகையான பறவைகள் 10 ஆயிரத்துக்கும் மேல் ஆண்டுதோறும் இங்கு வருகின்றன. நவம்பர் முதல் ஜனவரி வரை பறவைகளை பார்க்க ஏற்ற மாதங்களாகும்.
ஊசுடு ஏரி
 • தமிழ்நாடு - புதுச்சேரி எல்லைப்பகுதியில் 800 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம் 390 ஹெக்டேர் புதுச்சேரி பகுதியிலும், மீதமுள்ள பகுதி தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பூத்துறை - கடப்பேரிகுப்பம் பகுதிகளில் அமைந்துள்ளது. இதை 2008-ம் ஆண்டு புதுச்சேரி அரசும், 2015-ம் ஆண்டு தமிழக அரசும் சரணாலயமாக அறிவித்தது. புதுச்சேரி நகரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பிளம்மிங்கோ, கூழைக்கடா, வர்ணநாரை உள்பட 29 வகையான பறவைகள் 20 ஆயிரத்திற்கும் மேல் வருகின்றன. டிசம்பர், ஜனவரி மாதங்கள் பறவைகளை காண உகந்த மாதங்களாகும்.
Post a Comment (0)
Previous Post Next Post